இந்திய அணியில் அஸ்வின் எப்படி நுழைந்தார் தெரியுமா? அக்சர் பட்டேல் பெயரில் போலி இன்ஸ்டா பதிவால் பரபரப்பு

By 
poli3

2023 ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு, அஸ்வின் சேர்க்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு காயம் என்பதால்தான் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார் என கூறப்பட்ட நிலையில், அக்சர் பட்டேல் பெயரில் தற்போது ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த பதிவை அவர் உடனே அழித்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், அது போலி பதிவு என தற்போது தெரிய வந்துள்ளது. அந்த பதிவில், நான் வணிகவியல் (காமர்ஸ்) எடுத்ததற்கு பதிலாக அறிவியல் (சயின்ஸ்) பிரிவை எடுத்து இருக்கலாம். நல்ல செய்தி தொடர்பாளரை தேர்வு செய்து இருக்கலாம் என அக்சர் பட்டேல் கூறுவது போன்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

மேலும், எலும்புக் கூடு ஒன்று தன் இதயத்தை எடுத்து கொடுப்பது போன்ற படமும் அதில் இடம் பெற்றுள்ளது. அணியில் இடம் கிடைக்காமல் தன் இதயமே நொறுங்கிப் போனதாக அக்சர் கூறுவது போல அது சித்தரிக்கப்பட்டு இருந்தது.

அஸ்வின் சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி பேச வைத்து அணியில் இடம் பெற்று விட்டார் என சூசககமாக "செய்தி தொடர்பாளர்" என்ற வார்த்தையை அந்த பதிவில் கூறி இருக்கிறார் அதை பகிர்ந்தவர்.

2023 உலகக்கோப்பை தொடருக்கான உத்தேச இந்திய அணி செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். அந்த அணியில் காயம் ஏற்பட்டால் ஒழிய பெரிய அளவில் மாற்றம் இருக்காது என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கூறி இருந்தார்.

அப்போது சில வீரர்களை ஏன் அணியில் சேர்க்கவில்லை என ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி இருந்தனர். அவர்களில் முக்கியமான சிலர் சஞ்சு சாம்சன், சாஹல் மற்றும் அஸ்வின். இதில் சாம்சன் மற்றும் சாஹல் சமீபத்தில் ஒருநாள் அணியில் இடம் பெற்று பின் நீக்கப்பட்டவர்கள். ஆனால், அஸ்வின் கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இடம் பெற்றவர்.

இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் அக்சர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவர் இந்தியா திரும்ப, அவருக்கு பதில் அப்போது வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பின்னர் ஆஸ்திரேலியா தொடரில் திடீரென சுந்தரோடு, அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அக்சர் பட்டேல் நீக்கப்பட்டது அப்போது பல கேள்விகளை எழுப்பியது. அதை பயன்படுத்தியே இந்த போலி பதிவு வலம் வரத் துவங்கி உள்ளது.

Share this story