இப்போது இது தேவையா.. மாமனார் குற்றச்சாட்டு குறித்து கேள்வி.. கடுப்பான ஜடேஜா மனைவி..

By 
jaw

ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் ஜடேஜா கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளால் ரிவாபா ஜடேஜா கோபமடைந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. 

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திரா ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா மீது தந்தை அனிருத் சிங் ஜடேஜா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ரவீந்திர ஜடேஜாவுடன் திருமணம் முடிவடைந்த 3 மாதங்களில் சொத்துகள் அனைத்தையும் தனது பெயருக்கு மாற்றுமாறு ரிவாபா கூறியதாக தெரிவித்தார். 

அதேபோல் ரவீந்திர ஜடேஜா முழுக்க முழுக்க ரிவாபா மற்றும் அவரின் மாமியார் குடும்பத்தினர் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாகவும், ஒரே ஊரில் இருந்து ஜடேஜாவின் மனைவி மற்றும் நாங்கள் தனித்தனியே இருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பின் ஜடேஜாவின் வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் ரிவாபா குடும்பத்தினரே பார்த்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினர். 

மேலும் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே ரிவாபா எங்களின் குடும்பத்தினரை பிரித்ததாக காட்டமாக விமர்சித்தார். அனிருத் சிங் ஜடேஜாவின் பேட்டி வெளியான சில மணி நேரங்களிலேயே இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, சித்தரிக்கப்பட்ட எனது தந்தையின் பேட்டியை புறக்கணியுங்கள். 

என் தந்தை அளித்துள்ள பேட்டியில் உள்ள அனைத்து விஷயங்களும் பொய்யானது. எனது மனைவி மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும் முயற்சி அது. நானும் கூட நிறைய கருத்துகள் சொல்ல வேண்டிய தேவையுள்ளது. ஆனால் அதனை பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை. அந்த பேட்டி கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். ஜடேஜாவின் குடும்ப விவகாரம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா தனது கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் ரிவாபாவின் மாமனார் அனிருத் சிங் ஜடேஜாவின் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதனால் கோபமடைந்த ரிவாபா, நாம் இங்கு என்ன காரணத்திற்காக இருக்கிறோம். இந்த விவகாரம் பற்றி தெரிய வேண்டுமென்றால், நீங்கள் என்னை நேரடியாக தொடர்பு கொண்டு கேட்கலாம் என்று ஆவேசமாக கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Share this story