விமர்சனங்களை பற்றி கவலையில்லை, நாங்கள் மனரீதியாக வலுவானவர்கள் : துணை கேப்டன் ரஹானே

By 
Don’t worry about the criticism, we are mentally strong Vice-Captain Rahane

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லீட்சில் நாளை தொடங்குகிறது. 

லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரஹானே (146 பந்துகளில் 61 ரன்கள்), புஜாரா (206 பந்துகளில் 45 ரன்கள்) ஆகியோர் நிதானமாக விளையாடி 50 ஓவர்களில், 100 ரன்கள் எடுத்தனர்.

இதனால், வலைத் தளங்களில் எழுந்த விமர்சனத்துக்கு துணை கேப்டன் ரஹானே பதிலளித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :

மக்கள் என்னைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தான். முக்கியமான நபர்கள் பற்றி தான் மக்கள் பேசுவார்கள் என்பதை எப்பொழுதும் நான் நம்புகிறேன். அது குறித்து, நான் அதிகம் கவலைப்படவில்லை. 

பொருட்படுத்துவது இல்லை :

என்னை பொறுத்தமட்டில், அணிக்கு என்ன பங்களிக்கிறோம் என்பது தான் முக்கியமாகும். நாட்டுக்காக விளையாடுவது உத்வேகம் அளிக்கிறது. எனவே, நான் விமர்சனம் குறித்து பொருட்படுத்துவது கிடையாது.

2-வது டெஸ்டில் அணிக்கு பங்களிப்பை அளித்தது திருப்திகரமாக இருந்தது. சொந்த ஆட்டத்தை விட அணியின் நலன் தான் முக்கியமானதாகும். 

அணிக்கு என்ன தேவையோ? அதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். புஜாரா மெதுவாக விளையாடுகிறார் என்று எப்போதும் பேசுகிறோம். 

ஆனால், அவரது அந்த இன்னிங்ஸ் (லார்ட்ஸ் 2-வது இன்னிங்ஸ்) அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர் 200 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டார்.

நானும், புஜாராவும் நீண்ட நாட்களாக இணைந்து விளையாடி வருகிறோம். எப்படி நெருக்கடியை சமாளிக்க வேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை எந்த மாதிரி எதிர்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். 

மற்றபடி, எங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் குறித்து நாங்கள் சிந்திப்பது கிடையாது. 

எங்கள் கவனம் :

இங்கிலாந்து ஆடுகளங்களை பொறுத்தமட்டில், நீங்கள் சரியான இடத்தில் கட்டுக்கோப்புடன் பந்து வீச வேண்டியது முக்கியமானதாகும்.

எங்களது பவுலர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு இங்குள்ள சூழ்நிலையில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது தெரியும். 

லீட்ஸ் டெஸ்ட் போட்டி கடினமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இங்கு உத்வேகத்தை தொடருவதுடன், நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதிக்கலாம். 

நாங்கள் மனரீதியாக வலுவானவர்கள். எல்லா வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் நடந்த வாக்குவாதங்கள் குறித்து, நாங்கள் சிந்திக்கவில்லை. 

அடுத்து வரும் போட்டியில் தான் எங்கள் கவனம் இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் உடல் தகுதியுடன் அணி தேர்வுக்கு தயாராக இருக்கிறார்' என்றார்.
*

Share this story