இந்திய கிரிக்கெட் அணிக்கு, புதிய கோச்சர் ஆகிறார் டிராவிட்..

By 
Dravid is the new coach of the Indian cricket team.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் 59 வயதான ரவி சாஸ்திரியின் பதவி காலம் 20 ஓவர் உலக கோப்பையுடன் முடிவடைகிறது. 

வயது கட்டுப்பாடு காரணமாக, அவர் மறுபடியும் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முடியாது.

இதையடுத்து, புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நடைமுறையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தொடங்கி விட்டது. 

டிராவிட் ஒப்புதல் :

முன்னாள் கேப்டனும், இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டவருமான ராகுல் டிராவிட்டை அந்த பதவிக்கு கொண்டு வர இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டியது. 

இந்திய அணிக்குள் நுழையும் அளவுக்கு திறமையான பல இளம் வீரர்களை உருவாக்கியதில், முக்கிய பங்கு வகித்த டிராவிட்டே இந்த பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கருதிய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய டிராவிட் பிறகு கங்குலியும், ஜெய்ஷாவும் நிலைமையை எடுத்து கூறியபோது, 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை பயிற்சியாளராக இருக்க ஒப்புக் கொண்டார். 

இது இடைக்கால பயிற்சியாளர் அடிப்படையில் இருக்காது. முழுநேர பயிற்சியாளராக இருப்பார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

டிராவிட்டின் உதவியாளரும், முன்னாள் வீரருமான மராட்டியத்தை சேர்ந்த பராஸ் மாம்ப்ரே பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

சம்பளம் :

ரவிசாஸ்திரி ஆண்டுக்கு ரூ.8½ கோடி ஊதியமாக பெற்றார். அதை விட கூடுதலாக டிராவிட்டுக்கு வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. 

தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் 48 வயதான டிராவிட் பயிற்சியாளர் பதவிக்கு வந்ததும், அகாடமி பொறுப்பை ராஜினாமா செய்வார்.

Share this story