22 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.! - ஆண்டர்சன் அதிரடி அறிவிப்பு..

By 
andar

கடந்த 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள லங்காஷயர் பகுதியின் பர்ன்லியில் பிறந்துள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வத்தின் காரணமாக, 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதே போன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரையில்187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். தனது 20ஆவது வயது முதலே இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்த ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகளவில் விளையாடி வந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டைப் போன்று 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

ஜூலை 10 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியானது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியுடன் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 21 ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

ஆரம்பித்த இடத்திலேயே ஓய்வு பெற இருக்கிறார். இதுவரையில் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆண்டர்சன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது 188ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். ஆனால், அவர் இன்னும் 12 போட்டிகளில் விளையாடினால், சச்சின் டெண்டுல்கரின் 200 டெஸ்ட் போட்டிகள் சாதனையை சமன் செய்திருப்பார்.

ஆனால், அவர் அதற்குள்ளாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ஓய்வு முடிவு குறித்து ஆண்டர்சன் கூறியிருப்பதாவது: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி தான் எனது கடைசி டெஸ்ட் போட்டி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடியது அற்புதமான பயணமாக அமைந்துள்ளது.

கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் காரணமாக சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். ஓய்வு பெறுவதற்குரிய நேரம் வந்துவிட்டது. இது தான் அதற்கான சரியான நேரம்.

இந்த தருணத்தில் எனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இல்லையென்றால் இந்த சாதனை என்னால் செய்திருக்க முடியாது. அதே போன்று மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Share this story