இந்திய அணி பயிற்சியாளர் பதவி: மோடி, ஷாருக்கான் பெயரில் போலி விண்ணப்பங்கள்..

By 
sar5

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக் கான் மற்றும் தோனி பெயரில் 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). ராகுல் திராவிட் பதவிக்காலம் முடியவுள்ளதை அடுத்து புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்று வருகிறது.

இந்த முறை வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வாரியம் தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த பொறுப்பை கவனிக்க சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டவர்களின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லங்கர் போன்ற சிலர் பொறுப்பை ஏற்க மறுத்தனர்.

இந்தநிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக் கான் மற்றும் தோனி பெயரில் 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தலைமை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

அதன்படி, வந்திருந்த விண்ணப்பங்களை பிசிசிஐ ஆராய்ந்ததில், போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, வீரேந்திர சேவாக், ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி உள்ளிட்ட  பலரின் பெயரில் விண்ணப்பங்கள் வந்துள்ளதை அறிந்துகொண்ட பிசிசிஐ அவற்றை போலியானவை என அறிவித்துள்ளது.

கடந்த முறையும் பிசிசிஐ பல போலி விண்ணப்பங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளததால் அடுத்த முறை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய புதிய முறை கடைபிடிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Share this story