144 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில், முதல்முறையாக வாகை சூடியது நியூசிலாந்து

By 
For the first time in the 144-year history of cricket, New Zealand has been named

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன.

32 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5-வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. 

புஜாரா-கோலி :

புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6-வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.

கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட், 41 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 170 ரன்களில் சுருண்டது.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 53 ஓவர்களில் 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறைவான ஸ்கோர் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தனர். 

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினாலும் அதன் பிறகு அனுபவம் வாய்ந்த கேப்டன் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் பொறுமையாக ஆடி வெற்றிப்பாதைக்கு பயணிக்க வைத்தனர். பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு எடுபடாதது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

வில்லியம்சன்-டெய்லர் :

நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 45.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, கோப்பையையும் வசப்படுத்தியது. கேப்டன் வில்லியம்சன் 52 ரன்களுடனும் (89 பந்து, 8 பவுண்டரி), ராஸ் டெய்லர் 47ரன்னுடனும் (100 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

2-வது இன்னிங்சில் மட்டும் இந்திய அணி கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்திருந்தால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்து கோப்பையை பகிர்ந்திருக்கலாம். அவ்வாறு தான் நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை நமது நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பி வெறுப்பேற்றிவிட்டனர்.

144 ஆண்டுகால வரலாறு :

இந்த வெற்றியின் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்  சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து பெற்றுள்ளது. 

கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு  நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.  

இதற்கு முன்பு கடந்த2000ம் ஆண்டில் இந்தியாவை வீழ்த்து சாம்பியன்ஸ்  கோப்பையை கைப்பற்றியதே நியூசிலாந்து அணியின் சிறப்பான பங்களிப்பாக பார்க்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட பெறவில்லை என்ற சிறப்பையும் நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் 8 வெற்றியையும் ஒரு ட்ராவையும் அந்த அணி கண்டுள்ளது.

வாகை சூடிய நியூசிலாந்து அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடியும், 2-வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது

Share this story