பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

By 
gujarat6

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 37ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் மாநிலம் மொகாலி அருகிலுள்ள முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 37ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்று பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, கேப்டன் சாம் கரண் மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் பிராப்சிம்ரன் சிங் 35 ரன்களில் மோகித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிலீ ரோஸோவ் 9 ரன்களில் நூர் அகமது பந்தில் நடையை கட்டினார். கேப்டன் சாம் கரண் 20 ரன்களில் ரஷீத் கான் பந்தில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 6 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹர்ப்ரீத் சிங் 14 ரன்னிலும், ஹர்ப்ரீத் பிரார் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஹர்ஷல் படேல் 0 ரன்னில் வெளியேற, ரபாடா 1 ரன் எடுத்தார். இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும் மோகித் சர்மா மற்றும் நூர் அகமது தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ரஷீத் கான் ஒரு விக்கெட் எடுத்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சகா 13 ரன்களில் ஆட்டமிழக்க சுப்மன் கில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் 31 ரன்களில் நடையை கட்டினார். டேவிட் மில்லர் 4, அஸ்மதுல்லா உமர்சாய் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த ஷாருக்கான் 8, ரஷீத் கான் 3 என்று சொற்ப ரன்களில் நடையை கட்டினர். எனினும், கடைசி ஒரு ரன்னுக்கு சாய் கிஷோர் களமிறங்கினார். ராகுல் திவேதியா அந்த ஒரு ரன்னை எடுத்துக் கொடுத்து டைட்டன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தார்.

இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திலிருந்து 6ஆவது இடத்திற்கு முன்னேறியது.

இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 6 போட்டிகளில் 6 போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story