மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்: சாக்‌ஷி மாலிக் கண்ணீருடன் அறிவிப்பு..

By 
sakshi2

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்தத்தை விட்டே விலகுவதாக வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் உண்மையாக தொடர்ந்து போராடினோம். ஆனால் பிரிஜ் பூஷன் போன்ற ஒருவரின் தொழில் பங்குதாரரும், அவரின் நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

எனவே நான் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள் பெண் ஒருவர் தலைவராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை” என கண்ணீர் மல்க பேசினார்.

பஜ்ரங் புனியா பேசுகையில், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு தொடர்புடைய யாரும் போட்டியிட மாட்டார்கள் என அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து பின் வாங்கியிருப்பது துரதிருஷ்டவசமானது” என்றார். 

வினேஷ் போகட் கூறுகையில், “புதிதாக வரும் மல்யுத்த வீராங்கனைகளும் பாதிப்புக்கு ஆளாவார்கள்” என்றார். மேலும் பஜ்ரங் புனியா மற்றும் விகேன்ஷ் போகட் இருவரும் மல்யுத்ததிலிருந்து விலகுவது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.

பின்னணி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் நடத்துவது பலமுறை தள்ளிப்போனது. 

இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்திருந்தது. இந்தப் பின்னணியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் டிச.21 (வியாழக்கிழமை) நடந்தது. இன்று காலையில் டெல்லி வாக்குப்பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இந்நிலையில், தேர்தலில் சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தலைவர் பதவிக்கான தேர்தலுடன் மூத்த துணைத் தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இரண்டு இணை செயலாளர்கள் மற்றும் 5 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் 4 துணைத் தலைவர் பதவிகளையும் பிரிஜ் பூஷண் அணியினரே வென்றுள்ளனர்.

 

Share this story