என் முன் இரு வாய்ப்பு இருந்தது, நான் 2-வது வாய்ப்பை தேர்வு செய்தேன்: முகமது ஷமி

2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி காயத்துடன் விளையாடிய அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி மொத்தமாக 55 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி 15 விக்கெட்டுகளையும், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 16 விக்கெட்டுகளையும், நடப்பு உலகக்கோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஹீரோவாக முகமது ஷமி மாறினார்.
இதனிடையே கடந்த மாதம் முகமது ஷமியை பூமா நிறுவனம் தங்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவன விழாவில் பங்கேற்ற முகமது ஷமி, தான் கடந்து வந்த பாதை குறித்து பேசியுள்ளார். அதில், 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு முன் காயம் ஏற்பட்டது. அப்போது பரிசோதனை மேற்கொண்டபோது, எனக்கு இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதில் இன்று உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது, மற்றொன்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது. நான் இரண்டாவது வாய்ப்பை தேர்வு செய்தேன்.
ஒவ்வொரு முறையும் போட்டிக்கு பின் இந்திய அணி வீரர்கள் ஹோட்டலுக்கு திரும்பிய பின், நான் மருத்துவமனை நோக்கி செல்வேன். நாட்டுக்காக விளையாடும் போது, வலியை மறந்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார். அந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் முகமது ஷமி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் காயத்தில் இருந்து வர முடியாத நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் முகமது ஷமி மீது அவரது முன்னாள் மனைவி மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள், வரதட்சணை கொடுமை, பாலியல் குற்றச்சாட்டுகள், குடும்ப வன்முறை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதன் காரணமாக பிசிசிஐ ஒப்பந்தம் இடைநிறுத்தம் செய்யப்பட்டு, சில மாதங்களில் முகமது ஷமி தற்கொலை எண்ணங்களுடன் இருந்தார். அதன்பின் மீண்டு வந்துள்ள ஷமி, இந்தியாவின் ஹீரோவாக மாறியுள்ளார்.