25 நாட்கள் ஆஸ்பத்திரியில் தான் இருந்தேன்; ஐபிஎல், டி20 உலகக்கோப்பைக்கு தயாராகி வருகிறேன்: தீபக் சாஹர்..

By 
sahar

கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் தீபக் சாஹர் இடம் பெற்று விளையாடிய நிலையில், 5ஆவது போட்டியிலிருந்து விலகினார். தீபஹ் சாஹரின் தந்தை மூளை பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக 5ஆவது டி20 போட்டியிலிருந்து விலகினார்.

மேலும், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த நிலையில் அதிலிருந்து விலகினார். மூளை பக்கவாதத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சிங் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இது தொடர்பாக அவர்,

'அப்பா உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். மீண்டும் ஒருமுறை வாழ்வில் அல்லது வாழ்க்கையோடு எப்படிப் போராடுவது என்பதைக் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் மகனாக இருப்பது மிகவும் அதிர்ஷ்டசாலி. நல்ல விஷயம் என்னவென்றால், நான் என் தந்தையை முதன்முதலில் தாடியில் பார்த்தேன். தந்தை குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இடம் பெற்ற நிலையில் அதிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இந்தியாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் தீபக் சாஹர் அதில் இடம் பெறவில்லை. வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதில் தீபக் சாஹர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தீபக் சாஹர் கூறியிருப்பதாவது: தனது தந்தை தான் முக்கியம். கிரிக்கெட் விளையாட முக்கிய காரணமே அவர் தான். அவர் மருத்துவமனையில் இருக்கும் போது நான் வெளிநாட்டில் கிரிக்கெட் விளையாடினால் நான் மகனே கிடையாது. இந்தியாவில் போட்டிகள் நடந்தால் வீட்டிற்கு செல்லலாம். இதுவே வெளிநாட்டில் நான் இருந்து, அவசர சூழலில் நான் வீடு திரும்புவதற்கு தாமதம் ஏற்பட்டால் என்ன நடந்திருக்கும்.

மருத்துவமனையில் எனது தந்தையின் உடல் நிலையை பார்த்த பிறகு தான் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரிலிருந்து விலகினேன். அலிகாரில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவருடன் நான் 25 நாட்கள் இருந்தேன். அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. தற்போது ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Share this story