டோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை..

By 
cskms

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி ரூ.100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அறிக்கை தாக்கல் செய்த ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவர் தாக்கல் செய்த பதில் மனு, நீதிமன்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில் கூறியிருப்பதாவது: ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் நீதித்துறையையும், நீதிமன்றங்களையும் களங்கப்படுத்தும் வகையில் இருப்பதோடு மட்டுமின்றி நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக கூறி அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் இந்த வழக்கு விசாரண தொடர்பாக இறுதிகட்ட விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரமோகன் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக கூறி அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டுமே. ஆனால், அவர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Share this story