உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா vs பாகிஸ்தான் அணி இறுதி பரபரப்பு..

By 
ii1

ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால், உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அரை இறுதிப் போட்டி நடக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்கு அருகே வந்து பின் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவின் வெற்றியால் அந்த அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தை உறுதி செய்தது. அடுத்த போட்டியில் தோற்றால் கூட ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் நீடிக்கும்.

முதல் இரண்டு இடங்களில் இந்தியா, தென்னாப்பிரிக்கா தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளன. அரை இறுதிக்கு நான்கு அணிகள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில், நான்காவது இடத்தில் இடம் பெற்று அரை இறுதிக்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த மூன்று அணிகளும் தற்போது தலா 8 புள்ளிகளுடன் உள்ளன.

மூன்று அணிகளுக்கும் தலா ஒரு லீக் போட்டி மீதமுள்ளது. மூன்று அணிகளும் வெவ்வேறு அணிகளுடன் மோத உள்ள நிலையில் அதில் மூன்று அணிகளும் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடத்தை பிடிக்கும் அணி தேர்வு செய்யப்படும்.

இதில் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பெரிய வெற்றியை பதிவு செய்தால் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடம் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெறும்.

அப்படி பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றால், முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவுடன் தான் மோதும். அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் அரை இறுதி போட்டி நடைபெற வாய்ப்பு அதிகரித்து உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இருக்கும் அதே வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கும் உள்ளது. அந்த அணி தன் கடைசி லீக் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளை விட அதிக நெட் ரன் ரேட் பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறும்.

ஆப்கானிஸ்தான் அணி தன் கடைசி லீக் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளதால் அதில் வெற்றி பெற வாய்ப்பு குறைவு என கருதப்படுகிறது. இப்போது அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.338 ஆக உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அதை விட அதிக நெட் ரன் ரேட்டில் உள்ளதால் ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறும். அது கடினம் என்பதால், இந்தியா - ஆப்கானிஸ்தான் அரை இறுதி நடக்க வாய்ப்பு குறைவு தான்.

Share this story