ஹாக்கியில், இந்திய பெண்கள் கலக்கல் வெற்றி..பதக்கம் பறிப்பார்களா.?

By 
In hockey, will Indian women win medals

ஒலிம்பிக்கில், அயர்லாந்தை வீழ்த்திய இந்திய பெண்கள் ஹாக்கி அணி, இன்று தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி, காலிறுதி வாய்ப்புக்காக பரபரப்பாக காத்திருக்கிறது. பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமாடி வருகிறார்கள்.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, கிரேட் பிரட்டன், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் இடம் பிடித்துள்ளன.

நெதர்லாந்துக்கு எதிராக 1-5, ஜெர்மனிக்கு எதிராக 0-2, கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 1-4 என வரிசையாக படுதோல்வியடைந்தது. 4-வது லீக்கில் அயர்லாந்தை 1-0 என வீழ்த்தி, காலிறுதி வாய்ப்புக்கான வாய்ப்பை தக்கவைத்திருந்தது.

சீறிய வீராங்கனைகள் :

இந்நிலையில், இன்று தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா முதல் கோல் அடித்தார். 

முதல், கால்பகுதியின் ஆட்ட முடிவின் கடைசி நிமிடத்தில், தென்ஆப்பிரிக்கா பதில் கோல் அடித்தது. இந்திய வீராங்கனைகள் வீரியமுடன் களமாடினர். இதனால், முதல் கால் பகுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றன.

2-வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீராங்கனை கட்டாரியா 17-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். 

ஆட்டம் முடியும் நேரத்தில், தென்ஆப்பிரிக்காவின் ஹன்டர் கோல் அடித்தார். இதனால், 2-வது கால் பகுதி ஆட்டம் முடிவில் 2-2 என சமநிலை பெற்றன.

அசத்தலான வெற்றி :

3-வது காலிறுதி நேரத்தில், இந்தியா 32-வது நிமிடத்திலும் (நேஹா), தென்ஆப்பிரிக்கா 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தன. 

4-வது கால்பகுதி ஆட்டத்தில், இந்தியாவின் கட்டாரியா 49-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க, தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளால் அதற்கு பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், இந்திய பெண்கள் அணி 4-3 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் குதூகலத்தில், வீராங்கனைகள் துள்ளிக் குதித்து, ஒருவரையொருவர் மேலும் ஊக்கப்படுத்தினர்.

Share this story