இந்திய-இங்கிலாந்து கிரிக்கெட் டுடே: ஜெய்ஸ்வால் பொறுப்பான சதம்.. இந்தியா 336 ரன்கள் குவிப்பு..

By 
jsjs

விசாகப்பட்டினம் மைதானத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நடந்தது.

இதில், இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதன்படி ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா ஒரு பவுண்டரி கூட அடிக்காத நிலையில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில் 34 ரன்களில் ஆட்டமிழந்து இந்த முறையும் சொதப்பினார். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்னிலும், அறிமுக வீரர் ரஜத் படிதார் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து அக்‌ஷர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

எனினும் அக்‌ஷர் படேல் 4 பவுண்டரி அடித்த நிலையில் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் 17 ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். 

ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழக்கவில்லை. தேவைப்படும் போது பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இந்திய மண்ணில் சிக்ஸர் விளாசி தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

ஒட்டு மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2ஆவது சதம் விளாசியுள்ளார். சதம் விளாசிய நிலையில், அதனை 150 ரன்களுக்கு கொண்டு சென்றார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்துள்ளது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 257 பந்துகள் பிடித்து 17 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் உள்பட 179 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார். 

இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 179 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story