இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி.. ரன்ஸ் விவரம்..

By 
sasa11

இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக டிஎல்எஸ் முறையில் 15 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தால் தென் ஆப்பிரிக்க வெற்றி பெரும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப தொடக்கம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டனர் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள். அதிகபட்சமாக ஹென்றிக்ஸ் 49 ரன்கள் மற்றும் கேப்டன் மார்க்ரம் 30 ரன்கள் எடுத்திருந்தனர். 13.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷூப்மன் கில், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணைந்து மினி கூட்டணி அமைத்தனர். திலக் வர்மா, 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் மற்றும் ரிங்கு சிங் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை அவர் கடந்துள்ளார். ஜிதேஷ் சர்மா 1 ரன், ஜடேஜா 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார் ரிங்கு சிங். 19.3 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டது. அப்போது ஹாட்-ட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பில் இருந்தார் தென் ஆப்பிரிக்க வீரர் ஜெரால்டு கோட்ஸி. அந்த சூழலில் முதல் இன்னிங்ஸ் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

Share this story