15 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் சாதனை: எப்படி தெரியுமா?

By 
top5

இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்தியா போட்டிகளில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில், தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நிலைத்து நின்று விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு தேவ்தத் படிக்கல் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். சர்ஃபராஸ் கான் 60 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் தேவ்தத் படிக்கல் 103 பந்துகள் நின்று 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதங்களை கடந்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story