ஐபிஎல் டுடே: அறிமுக வீரரின் அதிரடியால் கிடைத்த 2-வது வெற்றி..

By 
gygyu

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

இதில், டாஸ் வென்று லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, கே.எல். ராகுல் மற்றும் குயீண்டன் டி காக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில், குயீண்டன் டி காக் 19 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் கலீல் அகமது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கலும் 3 ரன்களில் அதே மாதிரி எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார்.

இவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 8 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரை வீசிய நிலையில் அந்த ஓவரின் 3ஆவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

மீண்டும் வந்த குல்தீப் யாதவ் கேப்டன் கேஎல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். நடுவர் அவுட் தர மறுக்க ரிஷப் பண்ட் ரெவியூ கேட்டார். பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது.

இதையடுத்து கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக குல்தீப் யாதவ் 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசியில் எஞ்சிய 2 ஓவர்களையும் வீசி 20 ரன்களில் ஓவரை முடித்தார்.

குர்ணல் பாண்டியாவும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 12.6 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்து தடுமாறியது. கடைசியில் ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷாத் கான் இருவரும் அதிரடியாக விளையாடினர்.

இதில் ஆயுஷ் பதோனி 31 பந்துகளில் அரைசதம் அடித்து லக்னோ அணிக்கு ஆறுதல் கொடுத்தார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று அர்ஷாத் கான் 16 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 6ஆவது விக்கெட்டிற்கு அதிகபட்சமாக 73* ரன்கள் பார்ட்னர்ஷிர் எடுத்துக் கொடுத்து அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். இதே போன்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8 விக்கெட்டிற்கும் ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷாத் கான் இருவரும் 73* ரன்கள் பார்ட்னர்ஷிர் எடுத்துக் கொடுத்துள்ளனர்.

பின்னர் கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அதிரடி வீரர் டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதே போன்று நிதானமாக விளையாடிய பிரித்வி ஷா 32 ரன்களில் நடையை கட்டினார்.

அடுத்து வந்த அறிமுக வீரர் ஜாக் ஃப்ரேஸர் மெக்கர்க் அதிராடியாக விளையாடி ரன்கள் குவித்தார். குர்ணல் பாண்டியா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இவருடன் இணைந்து ரிஷப் பண்ட் அதிரடியை காட்டினார்.

இதில் மெக்கர் தனது அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த நிலையில் 35 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் இறங்கி அடிக்கு முயற்சித்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அப்போது தனது பேட்டையும் கீழே போட்டார். அது ராகுல் கையில் பட்டுள்ளது.

இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் இணைந்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர். கடைசியில் 18.1 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளிலும் லக்னோ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது 4ஆவது போட்டியில் டெல்லி வெற்றி பெற்றுள்ளது. 

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்து 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், ஆர்சிபி 9ஆவது இடத்திலிருந்து 10ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. இதே போன்று லக்னோ தோல்வி அடைந்த நிலையில் 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. அதோடு, சிஎஸ்கே 4ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Share this story