ஐபிஎல் சீற்றம்: டெல்லிக்கு கிடைத்த முதல் வெற்றி.! சிஎஸ்கே அணி.. சரி விடு பாத்துக்கலாம்..

By 
ikik

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 13ஆவது லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. பின்னர் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் 1, ரச்சின் ரவீந்திரா 2 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து அஜின்க்யா ரஹானே மற்றும் டேரில் மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். மிட்செல் 34 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே 45 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் அவுட்டானார்.

அடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த ஷிவம் துபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீர் ரிஸ்வி கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். தோனி வந்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார்.

ஆனால், 2ஆவது பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆஃப் சைடு பாய்ண்ட் திசையில் நின்றிருந்த கலீல் அகமது கோட்டைவிட்டார். அதன் பிறகு தோனி அதிரடி காட்டினார். ஜெயிக்கமாட்டோம் என்று தெரிந்த தோனி சிங்கிள் எடுக்கவில்லை. கடைசி ஓவர் முழுவதும் பேட்டிங் செய்தார். அந்த ஓவரில் மட்டும் தோனி 4, 6, 0, 4, 0, 6 என்று வரிசையாக 20 ரன்கள் விளாசினார். 

கடைசி வரை களத்தில் நின்ற தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்கள் எடுத்தார். இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டும் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. அதோடு, சிஎஸ்கே அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 3 ஆம் தேதி இதே மைதானத்தில் டெல்லி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. வரும் 5ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத்தில் வைத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

Share this story