ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பு : மழையால் கைவிடப்பட்ட நிலையில் குஜராத் வெளியேறியது.! முழு விவரம்..

By 
kujarain

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 63ஆவது லீக் போட்டியானது ரத்து செய்யப்பட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2ஆவது முறையாக மழையானது எமனாக வந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மே 28ஆம் தேதி நடைபெற இருந்த போட்டியானது மழையின் காரணமாக அடுத்த நாளுக்கு மாற்றப்பட்டது.

இரண்டாவது நாள் நடைபெற்ற இந்தப் போட்டியானது மழையின் காரணமாக தாமதமானது. எனினும், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது. அப்போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில், சிஎஸ்கேயின் வெற்றிக்கு 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

கடைசியாக ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடிக்கவே சிஎஸ்கே 5ஆவது முறையாக சாம்பியனானது. இதையடுத்து, தற்போது நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் 63ஆவது லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் குஜராத் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் ரேஸில் இடம் பெற்றிருக்கும். ஆனால், டாஸ் கூட போட முடியாத நிலையில், மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதல் முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 3ஆவது அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. மேலும், சுப்மன் கில் தலைமையில் முதல் முறையாக குஜராத் வெளியேறியிருக்கிறது. இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு தகுதிச் சுற்றுக்கு சென்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அணியாக ஐபிஎல் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதில் டிராபியை வென்றது. தற்போது 2ஆவது முறையாக தகுதிச் சுற்றுக்கு சென்றுள்ளது.

இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய போட்டி உள்பட 13 போட்டிகளில் 9 வெற்றி, 3 தோல்வி, ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில், 19 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்ட நிலையில் குஜராத் டைட்டன்ஸ் 3ஆவது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 13 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படாத நிலையில் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.

5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுவதற்கு கட் ஆஃப் நேரம் இரவு 10.56 மணி வரை பார்க்கப்பட்டது. ஆனால், மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக கடைசியில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. குஜராத் டைட்டஸ் 11 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

போட்டியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் லாவெண்டர் நிற ஜெர்சியில் விளையாட இருந்தனர். ஆனால், போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது. கடைசி போட்டியாக வரும் 16 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story