ஐபிஎல் ஆடுகளம்: குஜராத் 'த்ரில்' வெற்றி.! அதிரடி வீரர்கள் யார் யார் தெரியுமா?

By 
erert

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். இது சஞ்சு சாம்சனின் 50ஆவது ஐபிஎல் போட்டி. மேலும், யுஸ்வேந்திர சஹாலின் 150ஆவது ஐபிஎல் போட்டி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து, ஜோஸ் பட்லரும் 8 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதன் பிறகு அங்கிருந்து போட்டியை தங்களது பக்கம் கொண்டு வந்தனர். அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 34 பந்துகளில் 53 ரன்கள் குவித்து, இந்த சீசனில் 3ஆவது அரைசதம் அடித்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5ஆவது அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

கடைசியில் ரியான் பராக் 48 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், ரியான் பராக் 0 மற்றும் 6 ரன்களில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை குஜராத் வீரர்கள் தவறவிட்டனர். அதன் பிறகு ஷிம்ரன் ஹெட்மயர் களமிறங்கினர். தனது கேப்டன் பொறுப்பை உணர்ந்து விளையாடிய சாம்சன் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹெட்மயர் 13 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. இதில், 2ஆவது 10 ஓவருக்கு ராஜஸ்தான் 123 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஏகப்பட்ட கேட்ச் வாய்ப்புகளை குஜராத் வீரர்கள் நழுவ விட்டனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் உமேஷ் யாதவ், ரஷீத் கான், ரோகித் சர்மா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர், கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சாய் சுதர்சன் 35 ரன்களில் குல்தீப் சென் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மேத்யூ வேட் மற்றும் அபினவ் மனோகர் இருவரும் குல்தீப் சென் ஓவரில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இவர்களைத் தொடர்ந்து விஜய் சங்கர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் சுப்மன் கில் இந்த போட்டியில் 27 ரன்கள் எடுத்த போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

தொடர்ந்து விளையாடிய கில் 44 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இம்பேக்ட் பிளேயராக வந்த ஷாருக்கான் 14 ரன்களில் நடையை கட்டினார். கடைசியில் ராகுல் திவேதியா மற்றும் ரஷீத் கான் இருவரும் அதிரடி காட்டி வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். கடைசி ஓவரில் ராகுல் திவேதியா ரன் அவுட்டாக, கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ரஷீத் கான் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

இந்தப் போட்டியில் தங்களுக்கு சாதகமாக இருந்த வெற்றியை ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் குல்தீப் சென் 3 விக்கெட்டும், யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த தொடரில் இதுவரையில் 4 வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. எனினும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்றதோடு ஆர் ஆர் அணிக்கு எதிராக 5ஆவது (6 போட்டிகளில்) வெற்றி பெற்றுள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் 3ஆவது வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 17 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் டேல்லி கேபிடல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

Share this story