ஐபிஎல் 'த்ரில்': ஹதராபாத்-ராஜஸ்தான் மோதலில்.. திடீர் வெற்றி; யாரால் தெரியுமா.?

By 
sunrr

நடப்பு ஐபிஎல் சீசனின் 50-வது லீக் போட்டியில். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில், கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். புவனேஷ்வர் குமாரின் அசத்தல் பந்துவீச்சினால் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணி பேட்ஸ்மேன்களில் நிதிஷ் ரெட்டி 76 ரன்கள், ஹெட் 58 ரன்கள் மற்றும் கிளாசன் 42 ரன்கள் எடுத்தனர்.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் விரட்டியது. பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் ஓவரில் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சனை வெளியேற்றினார் புவனேஷ்வர் குமார். அவர்கள் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இணைந்து 134 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜெய்ஸ்வால், 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பராக், 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர், 13 ரன்கள் எடுத்து நடராஜன் பந்து வீச்சில் வெளியேறினார். கம்மின்ஸ் வீசிய 19-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் பந்தில் சிங்கிள் எடுத்தார் அஸ்வின். அடுத்த நான்கு பந்துகளில் 2, 4, 2, 2 ரன்கள் எடுத்தார் பவல். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. லெக் திசையில் ஃபுள் டாஸாக வந்த பந்தை பவல் மிஸ் செய்தார். அது அவரது பேடில் பட எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான். அதன் காரணமாக 1 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு அந்த அணி முன்னேறி உள்ளது. 10 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Share this story