ஐபிஎல் பரபரப்பு: 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்..

By 
ppp

ஐபிஎல் தொடரின் 65வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி,ஓப்பனிங் இறங்கிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரியோடு நடையைக் கட்டி அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

ஜாஸ் பட்லர் இல்லாத நிலையில், அவருக்கு பதிலாக இறங்கிய டாம் கோஹ்லர்-காட்மோர் 23 பந்துகளில் 18 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். கேப்டன் சஞ்சு சாம்சன் அதே 18 ரன்களோடு முடித்துக்கொண்டார். அடுத்து இறங்கிய ரியான் பராக் பொறுமையாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். அஸ்வின் தன் பங்குக்கு 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். 48 ரன்கள் எடுத்திருந்த ரியான் பராக் கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் சாம் கர்ரன், ராகுல் சஹார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

145 ரன் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஓப்பனர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆடினர். இதில் பிரப்சிம்ரன் சிங் வெறும் ஆறு ரன்களுடன் நடையை கட்டினார். ஜானி 22 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்து வந்த ரூஸ்ஸோ 22 ரன்களும், ஷஷாங் ஷா ஒரு ரன் கூட எடுக்காமலும் அவுட் ஆகினர். அடுத்து இறங்கிய சாம் கரன், ஜிதேஷ் சர்மா இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி துவண்டிருந்த அணிக்கு உற்சாகம் தந்தனர். ஜிதேஷ் சர்மா 15வது ஓவரில் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில் இருந்த சாம் கரன், 41 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்து வந்த அஷுடோஷ் சர்மா 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இப்படியாக 18.5 ஓவர்களில் 145 ரன்களை விளாசி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி வாகை சூடியது. ஆட்டத்தின் முடிவில் சாம் கரன், அஷுடோஷ் இருவரும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

Share this story