ஐபிஎல் பரபரப்பு: பஞ்சாப்புக்கு எதிரான களத்தில், பெங்களூரு அபார வெற்றி; ரன்ஸ் விவரம்..

By 
peng7

ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் வழக்கம்போல் களமிறங்கினர். டாப் ஆர்டர் ஆட்டம் கண்டது. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 9 ரன்களிலும், அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 12 ரன்களிலும் வெளியேறினர்.

இதனையடுத்து விராட் கோலி - ரஜத் படிதார் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக படிதார் 21 பந்தில் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த கையோடு 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரை சதம் கடந்துக்கு அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 பந்தில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும், வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்பின் 242 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரில்லி ரூசோவ், ஷஷாங்க் சிங் தவிர மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. ரில்லி ரூசோவ் 61 ரன்கள், ஷஷாங்க் சிங் 37 ரன்கள், ஷாம் கர்ரன் 22 ரன்கள் எடுத்தனர்.

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 17 ஓவர்களில் 181 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.பெங்களூரு தரப்பில், சிராஜ் 3 விக்கெட், ஸ்ப்நைல் சிங், பெர்குசன், கரண் சர்மா தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

Share this story