ஐபிஎல் 'அக்னி' : லக்னோ அணி தகிக்க, 98 ரன்னில் சாதனை படைத்த கேகேஆர்..

By 
kkrr

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 54ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 54ஆவது லீக் போட்டி ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பந்து வீசுவதாக அறிவித்தார்.

லக்னோ அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, மாயங்க் யாதவ்விற்கு பதிலாக யாஷ் தாக்கூர் அணியில் இடம் பெற்றார். கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து ,பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 4.2 ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடி காட்டவே, சுனில் நரைன் 39 பந்துகளில் 6 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரகுவன்ஷி 32 ரன்னிலும், ஆண்ட்ரே ரஸல் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரிங்கு சிங் 16 ரன்களில் வெளியேறினார். கடைசியில் ஷ்ரேயாஸ் ஐயர் 23 ரன்கள் எடுக்கவே, ராமன் தீப் சிங் 6 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில், நவீன் உல் ஹாக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியின் போது மோசின் கான் காயமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக கன்கஷன் வீரராக யுத்வீர் சிங் களமிறங்கி 2 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர், கடின இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் அர்ஷின் குல்கர்னி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த லக்னோ வீரர்கள் தீபக் கூடா 5, நிக்கோலஸ் பூரன் 10, ஆயூஷ் பதோனி 15, அஷ்டன் டர்னர் 16, குர்ணல் பாண்டியா 5, யுத்வீர் சிங் சரக் 7, ரவி பிஷ்னோய் 2 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக, லக்னோ அணியானது 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரத்தி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் சுனில் நரைன் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில், தோல்வி அடைந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இத்தனை நாட்களாக நம்பர் 1 இடம் பிடித்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளுமே தலா 16 புள்ளிகள் பெற்றுள்ளன.

Share this story