ஐபிஎல் அதிரடி : கேகேஆர் மிரட்சி; ஆர்ஆர் த்ரில் வெற்றி.! - ரன்ஸ் விவரம்..

By 
jos44

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஜோஸ் பட்லரின் அதிரடியால் 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 31ஆவது லீக் போட்டி ஈடன் கார்டனில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது.

இதில் சுனில் நரைனைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 49 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தையும் பதிவு செய்தார்.

கடைசியாக, நரைன் 56 பந்துகள் விளையாடி 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சதம் அடித்த சுனில் நரைனுக்கு ஷாருக்கான் பாராட்டு தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து பிரேக்கின் போது மைதானத்திற்குள் வந்த கேகேஆர் ஆலோசகர் கௌதம் காம்பீர், சுனில் நரைனை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்னர், கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களில் வெளியேற, ரியான் பராக் அதிரடி சரவெடியை வெளிப்படுத்தி 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்த துருவ் ஜூரெல் 2 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷிம்ரன் ஹெட்மயர் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். கடைசியில் வந்த ரோவ்மன் பவல் 13 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இம்பேக்ட் பிளேயராக தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் தனி ஒருவனாக போராடி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

ராஜஸ்தான் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 96 ரன்கள் தேவைப்பட்டது.

இதில் 15ஆவது ஓவரில் – 17 ரன்கள்

16ஆவது ஓவர் – 17 ரன்கள்

17ஆவது ஓவர் - 16 ரன்கள்

18ஆவது ஓவர் – 18 ரன்கள்

19ஆவது ஓவர் – 19 ரன்கள்

20ஆவது ஓவர் – 9 ரன்கள்

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்தி வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் பட்லர் சிக்ஸர் அடித்தார். அடுத்த 3 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அதுமட்டுமின்றி ஜோஸ் பட்லர் இந்தப் போட்டியில் 55 பந்துகளில் தனது 7ஆவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சீசனில் அவர் அடித்த 2ஆவது சதம் இதுவாகும். மேலும், ரன் சேஸிங்கில் 3 சதங்கள் விளாசியுள்ளார். இறுதியாக பட்லர் 60 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்திலேயே நீடிக்கிறது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story