ஐபிஎல் டுடே: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தாவுக்கு 6ஆவது வெற்றி, புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம்..

By 
ridd

ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 47ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

இதில், அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவத்தி 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், லிசாட் வில்லியம்ஸ் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட மொத்தமாக 23 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில், பிலிப் சால்ட் 15 ரன்கள் எடுத்தார். 2ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். அந்த ஓவரில் முதல் பந்திலேயே சால்ட் கொடுத்த வாய்ப்பை லிசாட் வில்லியம்ஸ் கோட்டைவிட்டார்.

அதன் பிறகு பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர், 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 33 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 68 ரன்களில் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 15 ரன்களில் ஆட்டமிழக்க, 3ஆவது வரிசையில் ரிங்கு சிங் களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசியில் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். ஷ்ரேயாஸ் 33 ரன்னும், வெங்கடேஷ் 26 ரன்னும் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்‌ஷர் படேல் 2 விக்கெட்டும், லிசாட் வில்லியம்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றதன் மூலமாக விளையாடிய 9 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திலுள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ் 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.

ஈடன் கார்டனில் இரு அணிகளும் மோதிய 10 போட்டிகளில் 8ல் கேகேஆரும், 2ல் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஈடன் கார்டனில் நடந்த போட்டிகளில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 6 இன்னிங்ஸ்களில் 344 ரன்கள் எடுத்துள்ளார் (இந்த ஆண்டு). இதற்கு முன்னதாக 2010 ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி (7 இன்னிங்ஸ் 331 ரன்கள்), 2019 ஆம் ஆண்டு ஆண்ட்ரே ரஸல் (7 இன்னிங்ஸ் 311 ரன்கள்), 2018 ஆம் ஆண்டு கிறிஸ் லின் (9 இன்னிங்ஸ் 303 ரன்கள்) எடுத்துள்ளனர்.

Share this story