ஐபிஎல் பரபரப்பு: குஜராத் அணியை வீழ்த்தி, லக்னோ 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

By 
now

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 21ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 54 ரன்கள் எடுத்தது. கில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 1, சரத் பிஆர் 2 ரன்களில் நடையை கட்டினர். நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தர்ஷன் நீல்கண்டே 12, விஜய் சங்கர் 17, ரஷீத் கான் 0, உமேஷ் யாதவ் 2 என்று சொற்ப ரன்களில் வெளியேறினர். கடைசி வரை நின்று விளையாடிய ராகுல் திவேதியா 25 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 30 ரன்கள் எடுத்து 9ஆவது விக்கெட்டாக தனது விக்கெட்டை இழந்தார். கடைசியில் நூர் அகமது 4 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் டைட்டன்ஸ் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் வெற்றி வாகை சூடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் யாஷ் தாக்கூர் 3.5 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்த சீசனில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை யாஷ் தாக்கூர் படைத்துள்ளார்.

குர்ணல் பாண்டியா 3 விக்கெட்டும், நவீன் உல் ஹாக், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டியைத் தொடர்ந்து லக்னோ அணி வரும் 12 ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது.

இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணியானது வரும் 10 ஆம் தேதி ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணியானது வரும் 10 ஆம் தேதி ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இது ராஜஸ்தானில் ஹோம் மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story