ஐபிஎல் விடாமுயற்சி: மும்பைக்கு எதிரான களத்தில்.. டோனி தெறிக்க விட்ட 20 ரன்னே வெற்றிக்கு காரணம்..

By 
20r

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 29ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.

இதில், ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார். மேலும், இந்தப் போட்டியின் மூலமாக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். ஷிவம் துபே 66 ரன்களுடனும், எம்.எஸ்.தோனி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடினர்.

பவர் பிளே ஓவரில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு பந்து வீச வந்த மதீஷா பதிரனா தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே இஷான் கிஷான் விக்கெட்டை கைப்பற்றினார்.

அவர் 23 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் முஷ்தாபிஜுர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த திலக் வர்மாவும், பதிரனா பந்தில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டமிழ்ந்தார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்னில் வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அடுத்து வந்த டிம் டேவிட் 13, ரொமாரியோ ஷெப்பர்டு 1 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இது அவரது 8ஆவது டி20 போட்டி சதமாகும். இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 105 ரன்கள் விளாசியிருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திலிருந்து சரிந்து 8ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் மதீஷா பதிரனா 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். துஷார் தேஷ்பாண்டே மற்றும் முஷ்தாபிஜூர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Share this story