ஐபிஎல் அனல்: குஜராத் அணியை வீழ்த்தி, பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. 

By 
rrccp

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 52ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சகா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சகா 1 ரன்னிலும், கில் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் 6 ரன்னில் வெளியேறினார். ஷாருக்கான் மற்றும் டேவிட் மில்லர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த ரஷீத் கான் 18, விஜய் சங்கர் 10, மானவ் சுதர் 1, மோகித் சர்மா 0 என்று சொற்ப ரன்களில் வெளியேற குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கேமரூன் க்ரீன் மற்றும் கரண் சர்மா தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 78 ரன்கள் குவித்தது. ஃபாப் டூப்ளெசிஸ் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் 5.5 ஆவது ஓவரில் ஃபாப் டூ ப்ளெசிஸ் 23 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் முறையாக ஆர்சிபி இந்த சீசனில் பவர்பிளேயில் ஒரு விக்கெட் இழந்து 92 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 1, ரஜத் படிதார் 2, கிளென் மேக்ஸ்வெல் 4, கேமரூன் க்ரீன் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக தொடங்கி நிதானமாக முடித்த கோலி 42 ரன்களில் வெளியேறினார்.

கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். ரஷீத் கான் ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரி உள்பட 16 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 21 ரன்னுடனும், ஸ்வப்னில் சிங் 15 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

 

Share this story