ஐபிஎல் ராஜ்ஜியம் : பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..

By 
natappu

நடப்பு ஐபிஎல் சீசனின் 69-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் இப்போதைக்கு இரண்டாம் இடத்துக்கு அந்த அணி முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விரட்டியது. பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து பேட் செய்ய வந்த ராகுல் திரிபாதி உடன் இணைந்து 72 ரன்கள் கூட்டணி அமைத்தார் அபிஷேக் சர்மா. 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ராகுல் திரிபாதி வெளியேறினார். நிதிஷ் ரெட்டியுடன் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அபிஷேக். அவர் 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிதிஷ் ரெட்டி 37 ரன்களில் அவுட் ஆனார். ஷபாஸ் அகமது 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கிளாசன், 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்துல் சமாத் 11 ரன்கள் மற்றும் சன்வீர் சிங் 6 ரன்கள் எடுத்திருந்தனர். 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

நடப்பு சீசனின் கடைசி போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவை பொறுத்தே புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்கப் போகும் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தா அல்லது ராஜஸ்தான் ராயல்ஸா என்பது உறுதியாகும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணி முதல் குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா அணியுடன் விளையாடும்.

Share this story