ஐபிஎல் அனல்: கேப்டனாக சாதித்து காட்டிய சுப்மன் கில்.! ஹர்திக் பாண்ட்யா அண்ட் கோ மிரட்சி..

By 
sgsg

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 5ஆவது போட்டி தற்போது அகமாதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

இதில், தமிழக வீரர் சாய் சுதர்சன் மட்டும் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டும், ஜெரால்டு கோட்ஸி 2 விக்கெட்டும் எடுக்க, பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட் கைப்பற்றினார். 

பின்னர்,169 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில், இஷான் கிஷான் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நமன் திர் 20 ரன்களில் நடையை கட்டினார்.

பின்னர் ரோகித் சர்மா மற்றும் டிவேல்டு பிரேவிஸ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் எடுத்தனர். எனினும், ரோகித் சர்மா அரைசதம் அடிக்காமல் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் உள்பட 43 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து பிரேவிஸூம் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 15 ஓவருக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்தது. கடைசி 5 ஓவருக்கு 43 ரன்கள் தேவை இருந்தது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கவே போட்டியானது குஜராத் பக்கம் திரும்பியது. 17ஆவது ஓவரை வீசிய ரஷீத் கான் 3 ரன்னும், 18ஆவது ஓவரில் மோகித் சர்மா 9 ரன்னும் கொடுத்தனர். இந்த ஓவரில் மோகித் சர்மா ஒரு விக்கெட் எடுத்தார்.

போட்டியின் 19ஆவது ஓவரை ஸ்பென்சர் ஜான்சன் வீசினார். இந்த ஓவரில் திலக் வர்மா மற்றும் ஜெரால்டு கோட்ஸி இருவரும் ஆட்டமிழந்தனர். கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 6 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். 

இதில் முதல் 2 பந்தில் 6, 4 என்று ஹர்திக் பாண்டியா விளாசவே, 3ஆவது பந்தில் ராகுல் திவேதியா கையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பியூஷ் சாவ்லா ஆட்டமிழக்க கடையில் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலமாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் போட்டியில் தோல்வி அடைந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் இளவரசர் என்று அழைக்கப்படும் கில் தனது முதல் ஐபிஎல் போட்டியில் ஒரு கேப்டனாக அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story