ஐபிஎல் பதிலடி: சன்ரைசர்ஸ் மிரட்சி; பெங்களூரு அணி 35 ரன்னில் மிரட்டலான வெற்றி..

By 
rcp000

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 41ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இது ஆர்சிபியின் 250ஆவது ஐபிஎல் போட்டியாகும். ஆர்சிபியின் முதல் போட்டியில் இடம் பெற்று விளையாடிய விராட் கோலி ஆர்சிபியின் 250ஆவது ஐபிஎல் போட்டியிலும் இடம் பெற்றார். இது, விராட் கோலியின் 246ஆவது ஐபிஎல் போட்டியாகும்.

ஃபாப் டூப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக தொடங்கினர். இதில், வழக்கம் போல் ஃபாப் டூப்ளெசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து மிடில் ஆர்டரில் வந்த ரஜத் படிதார், விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.

அவர், 20 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் தனது 94ஆவது அரைசதம் கடந்த கோலி 43 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 29 ரன்கள் எடுத்திருந்த போட்டியில் இந்த சீசனில் 400 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்ததோடு, 10 ஆவது சீசனிலும் 400 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

இவரைத் தொடர்ந்து வந்த மகிபால் லோம்ரார் 7 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த ஸ்வப்னில் சிங் 12 ரன்களில் ஆட்டமிழக்க, கேமரூன் க்ரீன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக, ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை கடந்து 206 ரன்கள் எடுத்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும், மாயங்க் மார்கண்டே மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஹெட் முதல் ஓவரிலேயே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து அபிஷேக் சர்மா 31 ரன்னிலும், எய்டன் மார்க்ரம் 7 ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக சன்ரைசர்ஸ் 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நிதிஷ் குமார் ரெட்டி 13, அப்துல் சமாத் 10 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிரடியாக ஆரம்பித்தார். 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் வெளியேற, ஷாபாஸ் அகமது நிதானமாக விளையாடி 37 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஜெயதேவ் உனத்கட் 8 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியின் மூலமாக சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. ஆர்சிபியை அதனுடைய சொந்த மண்ணி வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆர்சிபி, ஹைதராபாத்தை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியது. மேலும், கடந்த மாதம் மார்ச் 25ஆம் தேதி ஆர்சிபி முதல் வெற்றியை பெற்ற நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு 2 ஆவது வெற்றியை பெற்றுள்ளது.

எனினும், புள்ளிப்பட்டியலில் எந்த மாறமும் ஏற்படவில்லை. ஆர்சிபி 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திலும் உள்ளன. பவுலிங்கைப் பொறுத்த வரையில், ஆர்சிபி அணியில் ஸ்வப்னில் சிங், கரண் சர்மா மற்றும் கேமரூ க்ரின் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வில் ஜாக்ஸ் மற்றும் யாஷ் தயாள் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

 

 

Share this story