ஐபிஎல் கிரிக்கெட்: முதல் ஏலத்திலேயே குளறுபடியா? பஞ்சாப் கிங்ஸை ஏமாற்றிய மல்லிகா சாகர்?

By 
malliaka1

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்படுகிறது. இதுவரையில் 16 சீசன்கள் நடந்துள்ள நிலையில், 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் துபாயில் நடந்தது.

இதில், ஐபிஎல் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் முறையாக ரூ.24.75 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டார். இதே போன்று மற்றொரு வீரரான பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஷ்தாபிஜூர் ரஹ்மான், அவினாஷ் ராவ் ஆரவெல்லி ஆகியோர் நல்ல தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த நிலையில், தான் முதல் முறையாக மல்லிகா சாகர் நடத்திய இந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், துணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவும் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஏலத்தின் கடைசி நேரத்தில் சில உள்ளூர் வீரர்களை குறைந்த விலைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஏலம் எடுக்க முயற்சித்தது.

அப்போதுதான், நம்பர் 231 கொண்ட இந்திய வீரரான அசுதோஷ் சர்மாவை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு பஞ்சாப் ஏலம் எடுத்தது. இவரைத் தொடர்ந்து, நம்பர் 236 கொண்ட வீரரான விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வீரரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்க முயற்சித்தது. அந்த வீரரை தங்களுக்கு வேண்டும் என்று பிரீத்தி ஜிந்தா ஏலம் கேட்டிருக்கிறார்.

சரி, என்று ஏற்றுக் கொண்ட ஏலம் நடத்திய மல்லிகா சாகர், மற்ற அணிகளிடமும் வேறு யாராவது ஏலம் எடுக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எந்த அணியும் விருப்பம் தெரிவிக்காத நிலையில், சுத்தியலை கீழே அடிக்கப் போகிறேன் யாரேனும் வேண்டுமானால் கேளுங்கள் என்றார்.

அப்போது அவர் சுத்தியலை மேஜையில் அடித்தவாறு, விஸ்வநாத் பிரதாப் சிங்கை ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு கொடுப்பதை மறந்துவிட்டு அடுத்த செட்டில் 237 நம்பர் கொண்டு முதலாவதாக இருந்த ஷஷாங்க் சிங் என்ற வீரரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் கேட்க தொடங்கினார். இதனால், பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர் நெஸ் வாடியா, துணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மற்றும் பஞ்சாப் அணி நிர்வாகிகள் என்று பலரும் முதலில் நாங்கள் கேட்ட வீரரை கொடுங்கள் என்று கேட்டதோடு மட்டுமின்றி ஷஷாங்க் சிங் என்ற வீரரின் பெயரை ரத்து செய்யுமாறு கேட்டனர்.

என்னது தவறான பெயரா? அந்த வீரர் உங்களுக்கு வேண்டாமா? நாம், ஷஷாங்க் சிங் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சுத்தியல் கீழே வைக்கப்பட்டு அவருக்கான ஏலம் முடிக்கப்பட்டுவிட்டது. ஆதலால், 236 மற்றும் 237 எண் கொண்ட வீரர்கள் இருவரும் உங்களது அணியில் சேர்க்கப்படுகிறார்கள் என்று அறிவித்தார்.

இதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர் உள்பட நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கூட 236 மற்றும் 237 எண் கொண்ட வீரர்கள் இருவரும் உங்களது அணிக்கே சேர்வார் என்று அறிவித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்க நினைத்ததோ என்னவோ, விஸ்வநாத் பிரதாப் சிங். ஆனால், கூடுதலாக அவர்களுக்கு இலவச இணைப்பாக ஷஷாங்க் சிங் என்ற 32 வயது வீரரை தலையில் கட்டிவிட்டார்.

ஆனால், ஷஷாங்க் சிங் என்ற பெயரில் 19 மற்றும் 32 வயதில் இருவீரர்கள் இருக்கும் நிலையில், ஏலம் நடத்திய மல்லிகா சாகர் குழப்பமடைந்து இந்த தவறு நடந்து விட்டதாக சொல்லப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷஷாங்க் சிங் என்ற வீரர் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு இடம் பெற்ற நிலையில் மற்றொரு வீரர் ஷஷாங்க் சிங் (19) ஏலம் எடுக்கப்படாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story