ஐபிஎல் இடி : ரன்மழையில் இன்று முந்தப்போவது, சென்னையா? டெல்லியா?

IPL thunder Will Chennai be ahead in the rain today Tellia

நடப்பு ஐபிஎல் போட்டியில், இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்று, துபாயில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது. 

இதில் புள்ளிப் பட்டியலில், முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிடல்சும், சென்னை சூப்பர் கிங்சும் முனைப்புடன் மோதுகின்றன.

ஒருங்கிணைந்த பேட்டிங் :

டோனி தலைமையிலான சென்னை அணி, லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்தது. 

இதில் கடைசி 3 ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப்புக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது சென்னை அணியின் உத்வேகத்தை சற்று பாதித்துள்ளது. 

இதே மைதானத்தில், பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 134 ரன்னில் அடங்கியதும், இந்த இலக்கை அவர்கள் 13 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்ததும் கவனிக்கத்தக்கது.

எனவே, மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்றால், ஒருங்கிணைந்த பேட்டிங் அவசியமாகும். 

கெட்டிக்காரர் :

தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (533 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ்சும் (546 ரன்) திருப்திகரமான தொடக்கம் தருகிறார்கள். 

மிடில் வரிசையில், சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, கேப்டன் டோனியின் சீரற்ற பேட்டிங் பெரும்பாலும் சறுக்கி விடுகிறது. இதே போல் பந்து வீச்சிலும் அவ்வப்போது தான் நன்றாக செயல்படுகிறார்கள். 

ஆனாலும், நெருக்கடியான தருணங்களை கையாள்வதில் கெட்டிக்காரரான டோனியின் கேப்டன்ஷிப் அணிக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

ஏற்கனவே, டெல்லியிடம் லீக்கில் தோற்று இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க இதைவிட கச்சிதமான சந்தர்ப்பம் அமையாது. இதில் வெற்றி பெற்றால் சென்னை அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும்.

தவான்-ரிஷப் பண்ட் :

டெல்லி கேப்பிடல்சை எடுத்துக் கொண்டால் நடப்பு தொடரில் எல்லாவிதமான மைதானங்களிலும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை (10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளி) வெளிப்படுத்தியுள்ளது. 

தோற்ற 4 ஆட்டங்களில் கூட நெருங்கி வந்து தான் வெற்றியை கோட்டைவிட்டிருக்கிறார்கள். 

அந்த அணியில் ஷிகர் தவான் (544 ரன்), பிரித்வி ஷா (401 ரன்), கேப்டன் ரிஷப் பண்ட் (362 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (6 ஆட்டத்தில் 144 ரன்) பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் அவேஷ்கான் (22 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல் (15 விக்கெட்), அன்ரிச் நோர்டியா, ரபடா, அஸ்வின் வலு சேர்க்கிறார்கள். 

குறிப்பாக, நோர்டியா ஓவருக்கு சராசரியாக 5.59 ரன்னும், அக்‌ஷர் பட்டேல் 6.43 ரன்னும் விட்டுக்கொடுத்து சிக்கனத்தையும் காட்டியுள்ளனர். 

தசைப்பிடிப்பால், கடந்த 5 ஆட்டங்களில் ஆடாத ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

டெல்லி அணி நம்பிக்கை :

இந்த சீசனில் இரண்டு லீக்கிலும் 7 விக்கெட், 3 விக்கெட் வித்தியாசங்களில் டெல்லி அணி, சென்னையை வீழ்த்தியது. 

அது மட்டுமின்றி, கடந்த ஆண்டும் இரண்டு லீக்கிலும் இவர்களிடம் சென்னை வீழ்ந்தது. இதனால், டெல்லி வீரர்களின் நம்பிக்கை நிச்சயம் அதிகரித்து இருக்கும். 

அவர்களது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் திட்டமிட்ட வழிநடத்துதலும் டெல்லி அணியின் வீறுநடைக்கு பக்கபலமாக இருக்கிறது.
*

Share this story