ஐபிஎல் டுடே: 12 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி; சாதனை படைத்த கேகேஆர்..

By 
c122

வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 51ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில், அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் எடுத்தார். முதல் முறையாக களமிறங்கிய மணீஷ் பாண்டே42 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் எளிய இலக்கி துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.

இஷான் கிஷான் 13 ரன்களில் வெளியேற, நமன் திர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவும் 11 ரன்களில் நடையை கட்டினார். திலக் வர்மா 4, நேஹல் வதேரா 6, ஹர்திக் பாண்டியா 1 என்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். மிஸ்டர் 360 டிகிரி என்று சொல்லப்படும் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

டிம் டேவிட் 24 ரன்களில் ஆட்டமிழக்கவே கடைசியில் ஜெரால்டு கோட்ஸி 8, பியூஷ் சாவ்லா 0 ரன்னில் ஆட்டமிழக்க மும்பை இந்தியன்ஸ் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக மும்பை வான்கடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

Share this story