இதுதான் எம்.எஸ்.தோனியின் கடைசி ஐபிஎல் சீசனா?: பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்..

By 
may11

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பேசிய பேட்டிங் பயிற்சியாளர் அவர், இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒட்டு மொத்த ரசிகர்களின் ஆசையும் தோனி விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தோனியின் ஓய்வு குறித்து பேச்சு அடிபட்டு வருகிறது.

ஒவ்வொரு முறையும், ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நான் இன்னும் விளையாடுவேன் என்று தோனி கூறி வந்துள்ளார். கடந்த ஆண்டு கூட தோனி பெறுவதற்கான சரியான நேரம் இது தான். ஆனால், இது என்னுடைய கடைசி சீசன் அல்ல. உடல்நிலையை பொறுத்து அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில், கடைசியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி தான் தோனியின் கடைசி போட்டி என்றும், இந்த போட்டிக்கு பிறகு தோனி ஓய்வு குறித்து அறிவிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், தோனி அப்படி ஏதும் செய்யவில்லை. இந்த நிலையில் தான் தோனியின் ஓய்வு குறித்து பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அவர் இன்னும் நன்றாக பேட்டிங் செய்கிறார். எல்லா சீசன்களிலும் நல்ல தொடர்பில் தான் இருக்கிறார்.

கடந்த சீசனுக்கு பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சீசனிலும் அவருக்கு வலி இருக்கிறது. என்னுடைய கருத்தின்படி தோனி இன்னும் 2 வருடங்கள் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அவர் தான் முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார்.

இதே போன்று ருதுராஜ் கெய்க்வாட் பற்றி பேசிய ஹஸ்ஸி கூறியிருப்பதாவது: அவர் விளையாட்டில் சிறந்த சிந்தனையாளர். தோனியை பின்பற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், தோனியை பின்பற்றி களத்தில் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறார். அவர் எப்படி அமைதியாக செயல்படுகிறாரோ, அதே அளவிற்கு ஆதரவைப் பெறுவார் என்று கூறியுள்ளார்.

Share this story