பார்பேடோஸ் கிளப் போட்டியில் விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து வாரியம் அதிர்ச்சி

By 
jofra

காயத்திலிருந்து மீண்டு வரும் இங்கிலாந்து அதிவேக பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்குத் திரும்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னதாக பார்பேடோஸ் கிரிக்கெட் அசோசியேஷன் லீக்கின் பிரிவு ஒன்று போட்டி ஒன்றில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடியுள்ளமை இங்கிலாந்து நிர்வாகத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து அணி நிர்வாகி ராபர்ட் கீ-யிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ‘தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது, விசாரிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். பார்பேடோஸ் தான் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பூர்வீகம். இவர் மிக நீண்ட காலமாக முழங்கை காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை. இவரை மீண்டும் அணியில் சேர்ப்பதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ‘வெய்ட் அண்ட் வாட்ச்’ அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில் பார்பேடோஸ் டிவிஷன் ஒன் லீகில் ஆடி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை ஜோஃப்ரா ஆர்ச்சர் கைப்பற்றியிருப்பது இங்கிலாந்து முகாமில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இங்கிலாந்திடம் தெரிவிக்காமல் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடியிருக்கிறார். இந்நிலையில் இந்தியா வரும் இங்கிலாந்து டெஸ்ட் அணியை அறிவித்த பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ராபர்ட் கீ இது தொடர்பாகக் கூறிய போது, “எனக்கு  ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடியது பற்றி தெரியாது, நான் விசாரிக்கிறேன்” என்றார்.

28 வயதாகும் ஜோஃப்ரா ஆர்ச்சர் கடைசியாக மே மாதம் ஆடினார். ஆனால் ஆஷஸ் தொடரில் மீண்டும் காயமடைந்து விளையாடாமல் விலகினார். இப்போது அக்டோபரில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மத்திய வீரர்கள் ஒப்பந்தத்தை ஆர்ச்சருக்கு வழங்கியது. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்ச்சர் ஆட அனுமதி மறுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இப்போது இவர் பார்பேடோஸிற்காக ஆடுவதை எப்படி மதிப்பிடும் என்று தெரியவில்லை. இது கொஞ்சம் ஆர்ச்சருக்கு ரிஸ்க்தான். ஜூன் மாதம் நடைபெறும் 2024, டி20 உலகக்கோப்பைக்கு ஆர்ச்சர் தேவை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அவர் முழுதும் குணமடைந்து ஒரு முழு ஃபிட் வீரராக இங்கிலாந்துக்கு ஆட வேண்டும் என்று விரும்புகிறது.

இந்நிலையில் அவர் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் பார்பேடோஸ் லீக் மேட்சில் ஆடியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இங்கிலாந்து அணிக்கு ஆடுவதற்கே அவருக்கு இறுதிக்கெடு எதுவும் கொடுக்காமல் அவரை சுதந்திரமாக முழு உடல் தகுதி பெற ஐபிஎல் ஏலத்திலிருந்தே அவருக்கு தடை விதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பார்பேடோஸ் அணிக்காக அவர் ஆடி பந்து வீசியதை எப்படி பொறுத்துக் கொள்ளும்? எனவே ஜோஃப்ரா ஆர்ச்சர் மீது நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்றே தெரிகிறது.

Share this story