குளிக்கும் போதும், தூங்கும் போதும் டிராபியோடு வலம் வந்த கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ்..

By 
kkrs

பிசிசிஐயின் மூலமாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், இடம் பெற்று விளையாடிய 10 அணிகளில் கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு வந்தன.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியனானது.

முதல் இந்திய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் டிராபியை கைப்பற்றினார். இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டிராபியை வென்றது. இதைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ.20 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், ஐபிஎல் டிராபியையும் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு கேப்டனாக பெற்றுக் கொண்டார்.

ஐபிஎல் டிராபி என்பது ஒவ்வொரு அணியின் கனவு. இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. ஆனால், இதுவரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை.

ஆர்சிபிக்கு தான் அதனுடைய வலியும், வேதனையும் தெரியும். அப்படியிருக்கும் போது 3ஆவது முறையாக டிராபியை கைப்பற்றிய கேகேஆர் அணியில் அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டிராபியை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் இரவு தூங்கும் போதும் சரி, குளிக்கும் போதும் சரி டிராபியை உடனேயே வைத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை. ஆனால், இப்பொழுது அவரது தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story