டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென விலகிய கே.எல்.ராகுல்.. சர்பராஸ் கான் அறிமுகம் உறுதி..

By 
klklll

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ள நிலையில், சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரின் ஃபிட்னஸ் பொறுத்தே பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. 

இதனிடையே கேஎல் ராகுல் என்சிஏவில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். அதேபோல் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா நேரடியாக இந்திய அணியுடன் இணைந்து ராஜ்கோட்டிலேயே பயிற்சியை தொடங்கியிருந்தார். இதனால் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவருமே 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என்று பார்க்கப்பட்டது. 

ஆனால் கேஎல் ராகுல் முழு ஃபிட்னஸை எட்டாததால், அவர் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3வது டெஸ்ட் போட்டியில் ஆடிய அணியுடன் மீண்டும் இந்திய அணி களமிறங்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஜடேஜா அணிக்கு திரும்புவதால் அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ் இருவரில் ஒருவர் மட்டுமே பிளேயிங் லெவனில் இருக்க வாய்ப்புகள் உள்ளது. 

அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் இளம் வீரரான சர்பராஸ் கான் களமிறங்குவார் என்று பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாகவே இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்த சர்பராஸ் கான், 2வது டெஸ்டின்போது, இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 

முதல் தர கிரிக்கெட்டில் 45 போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ் கான் 14 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களை உட்பட 3,912 ரன்களை விளாசி இருக்கிறார். இவரின் பேட்டிங் சராசரி மட்டும் 69.85ஆக உள்ளது. 

கிட்டத்தட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் டான் பிராட்மேனுக்கு பின் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள ஒரே பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் தான். கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், கே.எல்.ராகுல் இடத்தில் சர்பராஸ் கான் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு பொறுப்பேற்றதில் இருந்து ரஞ்சி டிராபி கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ரஜத் பட்டிதர், சர்பராஸ் கான் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் விளையாடாத இஷான் கிஷன் இதுவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this story