சோதனைகளை வென்று சாதனைகள் படைப்போம் : மதுரை வெரோனிகா 'கெத்து'

veroni

மதுரை ஐயர் பங்களா பகுதியை சேர்ந்தவர் வெரோனிகா அன்னமேரி. உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வந்த இவர், தனது விடா முயற்சியால் உடல் எடையை பெருமளவில் குறைத்து பாடி பில்டராக ஜொலித்து வருகிறார்.

மேலும் கடந்த ஆண்டு 2022 ஆசிய அளவில் நடந்த பாடி பில்டர் போட்டியில் 6ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். பாடி பில்டராக திகழும் வெரோனிகா பள்ளி நாட்களில் எந்த விளையாட்டிலும் பங்கேற்றதில்லை. மேலும் 12-ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியை அவரால் தொடர முடியவில்லை. அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 108 கிலோ இருந்தார்.

மேலும் நீரிழிவு நோய், முழங்கால் மற்றும் கழுத்து வலியாலும் அவதிபட்டு வந்தார். அதிக உடல் எடை இருந்ததால் அவரை அவரது கணவர் கைவிட்டு சென்றார். இதனால் தனது மகள், மகனுடன், தந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவரது தந்தையும் இறந்துவிட்டார். குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது? என வெரோனிகா தவித்தார். உடல் பருமனை காரணம் காட்டி கணவர் கைவிட்டு சென்றதால் வெரோனிகா, தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக்கொண்டார். தனது உடல் எடையை குறைத்து பாடி பில்டராக வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

இதற்காக தனது 38-வது வயதில் ஜிம் ஒன்றில் சேர்ந்தார். தினமும் 5 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி எடுத்துக்கொண்டார். இந்த தீவிர பயிற்சி காரணமாக ஒரே ஆண்டில் தனது உடல் எடையில் 30 கிலோவை குறைத்தார். உடல் எடையை குறைத்தன் மூலம் வெரோனிகாவின் உடல்நல பிரச்சினைகளும் கட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து பல போட்டிகளிலும் பங்கேற்றார்.

பாடி பில்டர் உடையுடன் போட்டிகளில் பங்கேற்க முதலில் வெரோனிகாவுக்கு தயக்கம் ஏற்பட்டது. பின்பு தனது லட்சியத்தை நினைத்து ஏராளமான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடினார். தற்போது வெரோனிகாவுக்கு 42 வயதாகிறது. தான் பயிற்சி பெற்ற உடற்பயிற்சி கூடத்திலே தற்போது பயிற்சியாளராக வேலை பார்த்து தனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.

வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை கடந்து பாடி பில்டராக இருந்து அவர் சாதித்து வருவது பல பெண்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
 

Share this story