விராட் கோலி ஓபனிங் இறங்க வேண்டும் - மேத்யூ ஹேடன் விருப்பம்..

By 
metyu1

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களம் காண வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.

“பேட்டிங் ஆர்டரில் வலது - இடது காம்பினேஷன் இருக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து ஐந்து வலது கை பேட்ஸ்மேன்கள் என்பது எதிரணியின் லெக் ஸ்பின்னர்களுக்கு வேலையை எளிதானதாக மாற்றி விடும். கோலி, இன்னிங்ஸை ஓபன் செய்ய வேண்டும். அவர் அபார ஃபார்மில் உள்ளார். அப்படி இல்லையென்றால் எனது அணியில் அவருக்கு இடம் தர மாட்டேன். ரோகித் சர்மா, வெர்சடைல் வீரர். அவர் மிடில் ஆர்டரில் ஆடலாம். அதன் மூலம் அவர் பேட்டிங் குரூப்பை லீட் செய்ய முடியும்” என மேத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் களம் இறங்க உள்ள இரண்டாவது ஓபனர் யார் என்ற கேள்வி தான் எழுந்துள்ளது. ஏனெனில், பயிற்சி ஆட்டத்தில் ரோகித் மற்றும் சாம்சன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்திருந்தனர். அதை வைத்து பார்க்கும் போது கோலி அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் என இருவரில் யாரேனும் ஒருவர் தான் தொடக்க ஆட்டக்காரராக விளையாட முடியும்.

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 117 போட்டிகளில் கோலி விளையாடி உள்ளார். 117 இன்னிங்ஸில் 4,037 ரன்கள் எடுத்துள்ளார். 37 அரைசதம் மற்றும் 1 சதம் பதிவு செய்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 138. இதில் மொத்தமாக 80 இன்னிங்ஸ்களை மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாடி உள்ளார்.

9 ஆட்டங்களில் இன்னிங்ஸை ஓபன் செய்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய போது தான் சதம் பதிவு செய்திருந்தார். கோலி, இன்னிங்ஸை ஓபன் செய்ய வேண்டுமென வாசிம் ஜாபர், கங்குலி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

Share this story