வலியோடும், வேதனையோடும் விளையாடும் எம்.எஸ்.டோனி..

By 
cskkk

முழங்காலில் தசைநார் கிழிவினால் பாதிக்கப்பட்டதோடு ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் தோனி, வலியை குறைக்க தேவைப்படும் போது மருந்தும் எடுத்துக் கொள்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரையில் நடைபெற்ற 55 லீக் போட்டிகளின் முடிவுகளின்படி முதல் 4 இடங்களில் முறையே கொல்கத்தா, ராஜஸ்தான், சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதுவரையில் விளையாடிய 11 லீக் போட்டியில் 6 வெற்றியும், 5 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த சீசன் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், இதுவரையில் விளையாடிய 11 போட்டிகளில் ஒரு சில போட்டிகளில் தோனி களமிறங்கவே இல்லை.

மேலும், சில போட்டிகளில் 7ஆவது வரிசையில் களமிறங்கி விளையாடியுள்ளார். இந்த நிலையில் தான் கடைசியாக தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த 53ஆவது லீக் போட்டியில் தோனி 9ஆவது வரிசையில் களமிறங்கினார். எனினும், இந்தப் போட்டியில் அவர் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் தோனி 9ஆவது வரிசையில் களமிறங்கி விளையாடியது விவாதத்தை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். இவ்வளவு ஏன், சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடிய ஹர்பஜன் சிங் கூட, தோனி 9ஆவது வரிசையில் இறங்குவதற்கு பதிலாக விளையாடாமலேயே இருந்திருக்கலாம் என்றார்.

தோனி ஏன், 7ஆவது, 9ஆவது வரிசையில் களமிறங்கி விளையாடுகிறார் என்பதற்காக காரணம் குறித்து தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார்.

இந்த நிலையில் தான், தோனிக்கு தசைநார் கிழிசல் இருந்துள்ளது. அதோடு தான் இந்த தொடரில் இடம் பெற்று விளையாடியிருக்கிறார். ஆனால், தன்னால் முழுமையாக இடம் பெற்று விளையாட முடியாத நிலையில் தான் கேபடன்ஷியை ருதுராஜிடம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும், பேட்டிங்கில் 2 ரன்கள் ஓடுவதற்கு பதிலாக சிங்கிள் மட்டுமே எடுத்து வந்துள்ளார். அதோடு, ரன்கள் ஓடுவதை தவிர்த்து பவுண்டரியும், சிக்ஸரும் விளாசியுள்ளார். ரன்னிங்கிற்கு பெயர் போன தோனி, ஒரு சில போட்டிகளில் மட்டுமே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார். கால் வலியால் மெதுவாக ஓடி வந்து தான் இந்த சீசனில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தோனிக்கு முதல் சில போட்டிகளில் தசைநார் கிழிசல் ஏற்பட்டு அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக அவர் ஐஸ்பேக்கும் வைத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகியிருந்தது. மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்கும்படி கூறியிருக்கின்றனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விளையாடி வருகிறார்.

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பிறகு இளம் விக்கெட் கீப்பரான ஆரவல்லி அவனிஷ் மைதானத்தில் பயிற்சியும் மேற்கொண்டு வந்துள்ளார். ஆதலால், தோனி விளையாடாத போட்டிகளில் ஆரவல்லி அவனிஷ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. டெவான் கான்வேயும் காயம் காரணமாக இந்த சீசனில் இல்லை.

சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான அஜிங்கியா ரஹானே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ரவீந்திராவிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தற்போது ரஹானேவும் சொற்ப ரன்களில் வெளியேறி வருகிறார். மதீஷா பதிரனாவும் காயம் காரணமாக விலகியுள்ளார். முஷ்தாபிஜூர் ரஹ்மானும் தாயகம் திரும்பியுள்ளார்.

தீபக் சாஹர் காயம் காரணமாக போட்டிகளில் இடம் பெறவில்லை. இப்படி சிஎஸ்கே அணியில் அடுத்தடுத்து மோசமான பார்ம், காயம் காரணமாக வீரர்கள் விலகி வரும் சூழல் கருதி தோனி மட்டுமே போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தோனியால் அதிக ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாவிட்டாலும் கூட பீல்டிங்கில் தனது அனுபவ அறிவால் அணிக்கு ஆலோசனை வழங்கி வெற்றி தேடி கொடுத்து வருகிறார்.

 

 

Share this story