தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வேலவன் செந்தில்குமார், அனாஹத் பட்டம் வென்று அசத்தல்

By 
sksk

79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 15 வயதான அனாஹத் சிங், 27 வயதான தன்வி கன்னாவை எதிர்த்து விளையாடினார்.

இதில் முதல் செட்டில் கடுமையாக போராடிய போதிலும் அனாஹத் சிங் 9-11 என நெருக்கமாக தோல்வி அடைந்தார். 2-வதுசெட்டை அனாஹத் சிங் 11-4 தன்வசப்படுத்தினார். அப்போது திடீரென தன்வி கன்னா காயம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து அவர், போட்டியில் இருந்து விலகினார். இதனால் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 23 வருடங்களுக்குப் பிறகு தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் அனாஹத் சிங்.

இந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டு ஜோஷ்னா சின்னப்பா, 14 வயதில் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக உள்ளது. சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் 2-வது முறையாக பங்கேற்ற நிலையில் அனாஹத் சிங் வாகை சூடியுள்ளார். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் அவர், ஜோஷ்னா சின்னப்பாவிடம் தோல்வி அடைந்திருந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அபய் சிங் - வேலவன் செந்தில்குமார் மோதினார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் 12-10, 11-3, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Share this story