இந்திய கிரிக்கெட் அணியில் புது நடைமுறை: ரோகித் சர்மா எடுத்த முடிவு..

By 
rsrs

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா புதிய வழக்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அதாவது ஒவ்வொரு உலகக்கோப்பை போட்டிக்கும் முன் இந்திய வீரர்கள் வட்டமாக நின்று உற்சாகப்படுத்திக் கொள்வார்கள்.

பொதுவாக இது போன்ற நேரத்தில் அணியின் கேப்டன், தன் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசுவார் அல்லது அணியின் பயிற்சியாளர், பிற மூத்த வீரர்கள் பேசுவார்கள். ஆனால், ரோஹித் சர்மா இதில் புதுமையை புகுத்தி இருக்கிறார். அதாவது ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் ஊக்கம் அளித்து பேச வேண்டும். அது மூத்த வீரரோ, இளம் வீரரோ யாராக இருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் பேசியே ஆக வேண்டும்.

இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும் என ரோஹித் சர்மா நம்புகிறார். அது போட்டிகளிலும் பிரதிபலிக்கிறது. இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு முன் இளம் வீரர் சுப்மன் கில் ஊக்கம் அளித்து பேசினார். இந்திய அணியில் அனைவருமே அவரை விட மூத்த வீரர்கள் தான். ரோஹித், கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, ஷமி, ஜடேஜா என பல மூத்த வீரர்கள் இருந்த போதும் அவரை பேசுமாறு கூறினார் ரோஹித் சர்மா.

அதே போல, இந்த உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் பேசி உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜடேஜா பேசினார். ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன் விராட் கோலி, பாகிஸ்தான் போட்டிக்கு முன் பும்ரா, வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசினார்கள். ரோஹித் எல்லாம் இந்திய அணிக்கு கேப்டனா? என விமர்சனம் செய்தார்கள் ஆனால்.. என்ன சொன்னார் கில்கிறிஸ்ட்? அவர்களைத் தொடர்ந்து தற்போது சுப்மன் கில் பேசி இருக்கிறார்.

இனி அடுத்து இந்தியா ஆடும் போட்டிகளுக்கு முன் வேறு வீரர்கள் பேசுவார்கள். ரோஹித் சர்மாவின் இந்த திட்டம் அணியில் ஒற்றுமையையும், புரிதலையும் வளர்க்கும் எனவும் ரோஹித் சர்மா தான் ஒரு நல்ல கேப்டன் என்பதை இதன் மூலம் நிரூபித்து இருக்கிறார் எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
 

Share this story