ஒலிம்பிக் போட்டி எளிதாக இருக்காது : பி.வி.சிந்து

By 
 Olympics will not be easy PV Sindhu

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையரில் எளிதான பிரிவில் (ஜெ) உலக சாம்பியனும், கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இடம் பிடித்துள்ளார். 

உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சிந்து, லீக் சுற்று ஆட்டங்களில் தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள செங் நான் யியையும் (ஹாங்காங்), 58-வது இடத்தில் இருக்கும் கெனியா போலிகார்போவாவையும் (இஸ்ரேல்) எதிர்கொள்கிறார். இருவரும் முறையே 5 மற்றும் 2 முறை சிந்துவுடன் ஏற்கனவே மோதி இருக்கின்றனர். 

இதில், ஒரு முறையும் அவர்கள் வெற்றி கண்டதில்லை. இதில், வெற்றி பெற்றால் சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறுவார்.

கவனமாக செயல்படுவேன் :

போட்டி அட்டவணை குறித்து, பி.வி.சிந்து கருத்து தெரிவிக்கையில், ‘லீக் சுற்று அட்டவணை எனக்கு அனுகூலமாக அமைந்து இருக்கிறது. ஹாங்காங் வீராங்கனை நன்றாக விளையாடக்கூடியவர். எனவே அந்த ஆட்டம் சிறப்பானதாக இருக்கும். போட்டிக்கு வரும் எல்லோரும் உயர்வான பார்மில் தான் இருப்பார்கள். என்னால் நன்றாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும். 

எனவே, நான் ஒவ்வொரு ஆட்டமாக கவனத்தில் எடுத்து கொண்டு செயல்படுவேன். இது ஒலிம்பிக் போட்டியாகும். இதில் போட்டி எளிதாக இருக்கப்போவதில்லை. ஒவ்வொரு புள்ளியும் மிகவும் முக்கியமானது’ என்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் இந்திய வீரர் சாய் பிரனீத்துக்கும் எளிதான பிரிவு தான் (டி) கிடைத்து இருக்கிறது. 

சாய் பிரனீத் :

உலக தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் சாய் பிரனீத் லீக் சுற்று ஆட்டங்களில் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள மார்க் கால்ஜோவ் (நெதர்லாந்து), 47-ம் நிலை வீரர் மிஷா ஜில்பிர்மான் (இஸ்ரேல்) ஆகியோரை சந்திக்கிறார். இது பற்றி சாய் பிரனீத் கூறுகையில், ‘மிகவும் கடினமாகவும், அதிக எளிதாகவும் இல்லாத வகையில் போட்டி அட்டவணை ஒரு கலவையாக எனக்கு அமைந்து இருக்கிறது. 

எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற எனது முழு திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.’ என்றார்.

Share this story