பாராலிம்பிக் டுடே : வெள்ளிப் பதக்கம் வென்ற, முதல் இந்திய வீராங்கனை பவினா..

By 
Paralympic Today Pavina becomes first Indian to win a silver medal.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. 

இதில், இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில், 5-வது நாளான நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரைஇறுதி ஆட்டம் ஒன்றில், இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார்.

11 முறை தோல்வி :

34 நிமிடம் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில், வீல்சேரில் அமர்ந்தபடி கலக்கலாக ஆடிய பவினாபென் பட்டேல் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் ஜாங் மியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். 

11 முறை தொடர்ச்சியாக, ஜாங் மியாவிடம் தோல்வி கண்டு இருந்த பவினாபென் பட்டேல் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றியை பெற்றார்.

இதன் மூலம், குஜராத்தை சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல், பாராலிம்பிக்  டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.

வெள்ளிப் பதக்கம் :

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவினாபென் பட்டேல், உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கை சந்தித்தார். பரபரப்பாக அரங்கேறிய ஆட்டத்தில், சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் பவினாபென் பட்டேல் போராடி தோல்வியடைந்தார். 

இதன் மூலம், பவினாபென் பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

Share this story