இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி..

By 
inin1

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் வார்னர் 7, மிட்செல் மார்ஷ் 15, ஸ்டீவ் ஸ்மித் 4 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சரி, விக்கெட் விழுகிறதே இந்தியா ஜெயிச்சிரும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக, ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.

இதன் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இந்திய வீரர்கள் கண்ணீர்விட்டு அழுத காட்சியை காண முடிந்தது. ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் என்று ஒவ்வொருவரும் கண்ணீர் துளிகளுடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில், போட்டிக்கு பிறகு அவர்களது டிரெஸீங் ரூமிங்கிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ரவீந்திர ஜடேஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாங்கள் ஒரு சிறந்த போட்டியைக் கொண்டிருந்தோம், ஆனால் நேற்று குறுகிய காலத்தில் போட்டி முடிந்தது. நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம், ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து வழி நடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி டிரஸ்ஸிங் ரூமிற்கு வந்தது சிறப்பானது மற்றும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இதே போன்று முகமது ஷமியும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: துரதிர்ஷ்டவசமாக நேற்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி. டிரஸ்ஸிங் அறைக்கு வந்து தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி. திரும்பவும் மீண்டு வருவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Share this story