மீண்டும் பழைய பார்முடன் ரஹானே- புஜாரா : கோச்சர் தகவல்

By 
Rahane-Pujara with old form again Kochhar information

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 

பலத்த மழை காரணமாக, இரு அணியினரின் நேற்றைய பயிற்சி ரத்து செய்யப்பட்டது. முதலாவது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது டெஸ்டுக்கான அணிக்கு திரும்பியிருக்கிறார். 

அவரது வருகையால், யார் நீக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அறிமுக டெஸ்டிலேயே ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்திருப்பதால் அஜிங்யா ரஹானே அல்லது புஜாரா ஆகியோரில் ஒருவரது இடத்துக்கு ஆபத்து வந்துள்ளது.

கடைசி 16 டெஸ்டுகளில் ரஹானேவின் சராசரி ரன் வெறும் 24.39 தான். புஜாராவை எடுத்துக் கொண்டால் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசி 16 டெஸ்டுகளில் அவரது சராசரியும் (27.65) மோசமாகவே உள்ளது. 

ஆனால், அவர்களுக்கு ஏற்கனவே தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவுக்கரம் நீட்டியிருந்தார். 

உண்மையான நிலவரம் :

இந்நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரேவும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது :

'ரஹானேவும், புஜாராவும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவசாலிகள். ஒரு இன்னிங்சில் அசத்தி விட்டால், மீண்டும் பார்முக்கு திரும்பிவிடுவார்கள் என்பது தெரியும். 

ஒரு அணியாக ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருக்கிறோம். 

அணியில் அவர்களது பங்களிப்பு எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை அறிவோம். அவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு, போதுமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். 

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அவர்களது பார்ம் குறித்து விவாதிக்கப்படவில்லை. கான்பூர் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும், அதிலிருந்து நாம் பல சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ளமுடியும். 

அதில், வெற்றி பெறாவிட்டாலும், அதில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்திய கடுமையான முயற்சிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த ஆடுகளத்தில் 19 விக்கெட்டுகள் வீழத்தியது எளிதான விஷயம் அல்ல.

கழுத்து வலியையும் பொருட்படுத்தாமல் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா முதலாவது டெஸ்டில் சிறப்பாக பேட்டிங் செய்தார். 

அவரது உடல்தகுதி குறித்த தகவல்களை தெரிவிக்க அணியின் பிசியோதெரபிஸ்ட், பயிற்சியாளர் டிராவிட், கேப்டன் கோலியிடம் தொடர்பில் உள்ளார். போட்டி நெருங்கும்போது, அவர் விளையாடும் அளவுக்கு உடல்தகுதியுடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை முடிவு செய்வோம். 

வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இந்த ஆண்டில் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. எனவே, அவர் பழைய நிலைக்கு திரும்ப ஓரிரு போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியமாகும். 

கோலி திரும்புவதால், ஆடும் லெவன் அணி குறித்து முடிவு செய்வது, ஆரோக்கியமான ஒரு பிரச்சினையாக உருவாகியுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர் முதலாவது டெஸ்டிலேயே சதமும், அரைசதமும் அடித்தது வியப்புக்குரியது. 

ஆனால், சில நேரம் குறிப்பிட்ட ஆடுகளத்துக்கு ஏற்றார் போல் சரியான கூட்டணியுடன் இறங்க வேண்டிய நிலைமை உள்ளது' என்றார்.
*

Share this story