வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் சிஎஸ்கே: ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்..

By 
cskra

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணிக்கு அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.

இந்த ஆட்டத்தில் 232 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அஜிங்க்ய ரஹானே (1), ரச்சின் ரவீந்திரா (1), ருதுராஜ் கெய்க்வாட் (0) ஆகியோர் 3 ஓவர்களுக்கு உள்ளேயே நடையை கட்டினர். டேரில் மிட்செல் 34 பந்துகளில் 63 ரன்களும், மொயின் அலி 36 பந்துகளில் 56 ரன்களும் விளாசி நம்பிக்கை கொடுத்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதன் பின்னர் ஷிவம் துபே (21), ரவீந்திர ஜடேஜா (18) ஆகியோர் முக்கியமான கட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதிக்கட்ட ஓவர்களில் தோனி 11பந்துகளில் 26 ரன்கள் விளாசிய போதிலும் அது தோல்வி அடையும் ரன்களின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு கடும் சிதைவுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. ஷர்துல் தாக்குர் மட்டுமே 4 ஓவர்களை வீசி சராசரியாக ஓவருக்கு 6.25 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களை வீசி 33 ரன்களை வழங்கியிருந்தார். இவர்களை தவிர மற்ற அனைத்து பந்து வீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 13 ரன்களுக்கு மேல் தாரை வார்த்தனர். டேரில் மிட்செல் 4 ஓவர்களை வீசி 52 ரன்களை கொடுத்திருந்தார்.

முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான முஸ்டாபிஸுர் ரஹ்மான், தீபக் சாஹர், மதிஷா பதிரனா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறி உள்ளது சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சையும் பலவீனமாக்கி இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை சிஎஸ்கே அணி கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய ஆட்டம் பிற்பகலில் நடைபெறுவதால் பனிப்பொழிவு பிரச்சினை பெரிய அளவில் இருக்காது. இதை பயன்படுத்திக் கொள்வதில் சிஎஸ்கே அணி தீவிரம் காட்டக்கூடும்.

இது புறம் இருக்க ஆல்ரவுண்டரான ஷிவம் துபே, டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் இருந்து பெரிய அளவிலான ரன் வேட்டையில் ஈடுபடவில்லை. கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் அவர், இரு முறை ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்துள்ளார். இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்திய அணியில் தனது தேர்வுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் ஷிவம் துபே உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்றைய போட்டி உட்பட 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துவிடும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்திலும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

தொடக்க வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தால் நடுவரிசையில் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஜோடி தங்களது அதிரடியால் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வது பெரிய பலமாக உள்ளது. ஷுபம் துபே, ரோவ்மன் பவல், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். சேப்பாக்கம் ஆடுகளத்தை அவர், நன்கு அறிந்தவர் என்பதால் சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அவேஷ் கான் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.

 

 

Share this story